Trending

6/recent/ticker-posts

Live Radio

வழக்கு விசாரணை; எதிர்க்கட்சிகள் அச்சம் – நளிந்த ஜயதிஸ்ஸ...!



“அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாலேயே, எதிர்க் கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான விடயங்களைக் கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். 

மே, ஜூன் மாதங்களாகும்போது வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும். வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது என்னவாகும் என்பதை அவர்களே அறிவார்கள் அதனாலேயே எதிர்த் தரப்பினர் பீதியடைந்துள்ளனர்” என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

‘‘வாக்குறுதியளித்தது போல அஸ்வெசும கொடுப்பனவு, அரச அதிகாரிகளுக்கான சம்பள அதிகரிப்பு, தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு, பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு என்பவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பார்த்தால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய விடயங்களை பெற்றுக்கொடுத்து முகாமைத்துவ பணிகளையும் முன்னெடுத்து வருகிறோம்.

இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாலேயே எதிர்க் கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக சூழ்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளனர். இவ்வாறான விடயங்களை கண்டு நாங்கள் பயங்கொள்ள மாட்டோம். மக்களின எதிர்பார்ப்புக்கமைய எதிர்வரும் நாட்களில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும். மே, ஜூன் மாதங்களாகும்போது வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும். தொடர்ச்சியான வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்த விசாரணைகள் ஆரம்பித்தவுடன் எதிரணிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளுக்கு திகதி அறிவிக்கப்பட்டது. அந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது என்னவாகும் என்பதை அவர்களே அறிவார்கள். அதனாலேயே எதிர்த்தரப்பினர் பீதியடைந்துள்ளனர்.

சில சந்தர்ப்பத்தில் மக்களின் சாண வீச்சியையும் பொறுத்துக்கொண்டு இருப்பதற்கான காரணத்தை, வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகும்போது அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்’’ என்றார்.

Post a Comment

0 Comments