Trending

6/recent/ticker-posts

Live Radio

அரசை அசௌகரியப்படுத்த வேலைநிறுத்தம் - சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு...!



அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டமானது எந்தவித நியாயமான காரணங்களும் அற்ற, குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்ட ஒரு தேசத்துரோகச் செயல் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படையாகக் கூறப்படும் பயிற்சி வைத்தியர்களின் நியமன விவகாரம் ஏற்கனவே முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

பயிற்சி முடித்த வைத்தியர்களில் 96.25 சதவீதமானோர் அரச சேவையில் இணைவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், எஞ்சியிருந்த மிகச்சிலரும் ஏற்கனவே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதைக் குறிப்பிட்ட அமைச்சர், தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து நோயாளிகளைப் பணயக்கைதிகளாக்குவது முறையற்றது எனத் தெரிவித்தார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று, வைத்தியர்களாக உருவானவர்கள் அதே மக்களுக்கு சேவை செய்ய மறுப்பது பாரிய அநீதியாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் சுகாதார சேவையைத் தடையின்றி வழங்க முயன்று வரும் வேளையில் இவ்வாறான போராட்டங்கள் தேவையற்ற குழப்பங்களை விளைவிப்பதாகக் கூறினார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக மீண்டும் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தமையானது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உள்நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையைப் புறக்கணித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதை அமைச்சர் பாராட்டியதுடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தற்போதைய தலைமைத்துவம் வைத்தியத் துறையின் கௌரவத்தைச் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டினார். எனவே, வைத்தியர்கள் உடனடியாகத் தமது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும், தேவையற்ற அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணை போக வேண்டாம் என்றும் அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments