Trending

6/recent/ticker-posts

Live Radio

ஜனாதிபதி தலைமையில் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்...!



இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லாக, "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 5,000 ரூபாய் வரையான லங்கா கியூஆர் (LankaQR) கொடுக்கல் வாங்கல்களுக்காக வர்த்தகர்களிடம் அறவிடப்படும் சேவைக்கட்டணம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

இது சில்லறை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் மத்தியில் டிஜிட்டல் பரிமாற்றங்களை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஆதரவுடன், நாடு முழுவதும் 450,000 வர்த்தக இடங்களில் LankaQR வசதி நடைமுறையில் உள்ளது.

நாட்டில் தற்போது 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்தத் தொகையைக் குறைத்து, ' நாணயத்தாளற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

QR கொடுப்பனவு முறையை வலுப்படுத்துவதற்காக தமிழ் , சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களை உற்சாகப்படுத்த 10 இலட்சம் ரூபாய் வரையான பெறுமதிமிக்க பரிசில்களைக் கொண்ட குலுக்கல் போட்டிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் டிஜிட்டல் பரிமாற்றங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய 'சமூகத் தெரிவுநிலை சுட்டெண்' (Social Visibility Index) ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பை நோக்கி இலங்கை எடுத்துள்ள முக்கிய நகர்வாக இது கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments