
அதிமுகவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (25) தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இன்று மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று நிறைவடைந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி ஆட்சியை அமைத்தது. சட்டப்பேரவையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் போது ஆளுங்கட்சிக்கு அதிமுகவின் எஸ் பி வேலுமணி - சி.வி சண்முகம் தலைமையிலான அதிருப்தி அணியினர் வாக்குகளை அளித்து அரசை வெற்றி பெறச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அண்மையில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் அரசுக்கு ஆதரவளித்த அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான அணியின் இடம் பிடித்திருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து அந்த மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையாவும் இன்று சபாநாயகரை சட்டப்பேரவையில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகிய நால்வர் விலகி தங்களது உறுப்பினர் பதவியை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் இடைத்தேர்தல்களை சந்திக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்திருக்கிறது.
இதனிடையே அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையும் முன்னாள் அதிமுகவினருக்கு அதே தொகுதிக்கான இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர்கள் வெற்றி பெற்ற பின்... அமைச்சர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பதும், இதன் காரணமாக வரும் நாட்களில் அதிமுகவில் இருந்து மேலும் சிலர் பதவி விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



0 Comments