
புத்த ரஷ்மி வெசாக் வலயம் பற்றிய இறுதிக் கலந்துரையாடல், இன்று (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, குறிப்பாகப் புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் முன்னெற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வெசாக் வலயத்தின் காலப்பகுதியில் மின்சக்திப் பயன்பாடு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டிற்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை வெசாக் பண்டிகையை முன்னிட்டுத் தளர்த்துவது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், வெசாக் வலயத்தின் பணிகளை வெற்றிகரமாக ஒழுங்கமைத்து ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் இடம்பெற்றது.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைய, குறைந்த எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில், அலங்கார வழிபாடுகளை விட ஆன்மீக வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் வெசாக் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.
மேலும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், மின்சக்தி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



0 Comments