Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையில் இன்னும் டெங்கு - 24 மணிநேரத்தில் 1217 நோயாளர்கள்...!



நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இந்நிலைமை இன்னமும் அபாயகரமான மட்டத்திலேயே நீடிப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இது குறித்து விளக்கமளித்த அவர், 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 21,565 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்துடன் டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

வழமைப் போன்றே மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களில் 52.5 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கொழும்பு மாவட்டத்தில் 11,392 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11 006 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இந்த இரு மாவட்டங்களுமே டெங்கு பரவலில் முதன்மையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, வீடுகள், பொது நிறுவனங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலில் இன்னும் நுளம்புகள் பெருகும் இடங்கள் அப்படியே காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் நுளம்புகளிடையே டெங்கு வைரஸ் வகை 2 மற்றும் வகை 3 (Denv-2 & Denv-3) பரவியுள்ளதால், நுளம்பு கடிக்கு உள்ளாகுபவர்கள் எளிதில் பாதிக்கப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவன வளாகங்களிலேயே நுளம்புகள் பெருகும் இடங்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.

இதனால் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் பாடசாலைகளை இலக்கு வைத்து விசேட டெங்கு ஒழிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க வாய்ப்புள்ளதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கினாலும், பொதுமக்கள் மத்தியில் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை என மருத்துவர் கபில கன்னங்கர கவலை வெளியிட்டுள்ளார்.

டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்ட வீடுகளிலேயே மீண்டும் நுளம்பு குடம்பிகள் கண்டறியப்படும் அவலநிலை நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் தங்களின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதால் சுகாதார ஊழியர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலை தொடர்ந்தால், டெங்கு நோயாளர்களுக்கு மட்டுமன்றி ஏனைய அவசர நோய்களுக்காக வரும் நோயாளர்களுக்கும் உரிய சிகிச்சைகளை வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சூழலைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக அழிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர அவசரமாக கோரியுள்ளார்.

Post a Comment

0 Comments