Trending

6/recent/ticker-posts

Live Radio

அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு நாட்டின் எதிர்காலத்திர்க்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் ; ராஜித்த சேனாரத்ன...!


வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும் அரசாங்கம் நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதில் மட்டும் மும்முரமாக செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கு நாட்டின் எதிர்காலத்திர்க்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி திங்கட்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
Executive Branch

உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதற்காக அரசாங்கம் மிகவும் அவசரமாக அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், நாட்டு மக்கள் மத்தியில் இது குறித்து எந்த ஆர்வமும் இல்லை.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஏற்றுமதி வருமானம் 9 வீதம் உயரும்போது, இறக்குமதி செலவு 26வீதம் அதிகரிக்கிறது. வர்த்தகப் பற்றாக்குறை சென்ற ஆண்டு 2.3 பில்லியன் டாெலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 4 பில்லியன் டாெலருக்கு அருகில் செல்கிறது.

பொருளாதார வளர்ச்சியை 5வீதமாக வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி 3 வீதமாகத்தான் இருக்கும் எனக் கூறுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு கையிருப்பு 10 பில்லியன் டாெலருக்கு மேல் இருக்க வேண்டும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க விட்டுச்சென்ற அதே 6 பில்லியன் டாெலர் அளவிலேயே அது உள்ளது.

இவற்றையெல்லாம் செய்யத் தவறிய அரசாங்கம், நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதில் மட்டும் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவோம் என்று சொன்னவர்கள், இப்போது இந்த ஒரு விஷயத்திற்காக மட்டும் அரசியலமைப்பை மாற்றத் துடிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னால் சொல்லப்பட்ட மாற்றங்கள் எங்கே?

சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமடையும் என எச்சரித்துள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில், அதற்கான தீர்வுகளைத் தேடாமல், நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதில் அரசாங்கம் ஏன் மும்முரமாக உள்ளது? வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காகவே இதைச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ஒன்பது நீதியரசர்களுக்கான இடங்கள் வெற்றிடமாக உள்ளன. அவற்றை ஏன் நிரப்பவில்லை? அந்தப் வெற்றிடங்களை நிரப்புவதை விட்டுவிட்டு, ஏன் சேவைக்கால நீட்டிப்பு?

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. நீதிமன்ற நீதிபதிகள் கூட இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இப்போது, இவர்களுக்குச் சலுகை வழங்கினால், எங்களுக்கும் வேண்டும் என அரச ஊழியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றிலேயே இத்தகையதொரு இக்கட்டான நிலை ஏற்பட்டதில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, அரச ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இவ்வாறான நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு, அரசாங்கத்தால் எவ்வாறு இந்த முடிவைச் செயல்படுத்த முடியும்? சட்டப்படி பார்த்தால், இது தற்போது பதவியில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது.

இது குறித்துத் தீர்மானிக்க வேண்டுமென்றால், பொதுமக்களின் கருத்தைக் கோர ஒரு சர்வஜன வாக்கெடுப்புக்கே செல்ல வேண்டும்.

எமது நாடு ஏற்கனவே 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் காலத்தில் நடந்தது போல எதையும் இப்போது செய்துவிட முடியாது. இன்று மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து சர்வதேச அளவில் மிகத் தீவிரமான கண்காணிப்பு உள்ளது. இந்த அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் பயணிப்பது நாட்டின் எதிர்காலத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments