ஒவ்வொரு சிறாரும் அன்பு, பராமரிப்பு, கல்வி மற்றும் பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் என்பதை அதிகம் வலியுறுத்தும் ஒரு நாளாக உலக சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
சிறுவர்களின் நலன்சார்ந்த விடயங்கள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியான, பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையை சுட்டிக்காட்டும் வகையில் உலக நாடுகள் சிறுவர் தினத்தை கொண்டாடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையினால் உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
சிறுவர்கள் எதிர்காலத்தை மாத்திரமன்றி, நிகழ்காலத்தையும் வடிவமைப்பதில் அதிக பங்களிப்பு செலுத்துபவர்கள் என்பதை இன்றைய நாள் வலியுறுத்துகிறது. பின்னணி எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்குமான வாழ்வியல், வளர்ச்சி மற்றும் கற்றல் சார்ந்த சூழலை உருவாக்குவதன் அவசியத்தையும் உலக சிறுவர் தினமான இன்றைய நாளில் பெரியோர்களுக்கு வலியுறுத்தப்படுகின்றது.
1954ம் ஆண்டு முதன்முறையாக உலக சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள சிறுவர்களின் நல் வாழ்வை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் சர்வதேச சிறுவர் தினம் அறிவிக்கப்பட்டது.
இன்றைய உலகில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு அமைதியான வாழ்வியல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அமைப்புகள் பல அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
யுத்த சூழல், பொருளாதார நெருக்கடி, வீட்டு வன்முறைகள், ஆட்கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றினால் சிறுவர்களின் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கிக்கொடுப்பதே இன்றைய காலத்தின் பிரதான தேவையாக உள்ளதென ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சமூகம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள், கலாசார வேறுபாடுகள் போன்ற காரணங்களும் சிறுவர்களின் அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகின்றன. இதனால் சிறுவர்களின் குரலுக்கு செவிசாய்க்கும் ஒரு சமூகம் அனைத்து நாடுகளிலும் உருவாக வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் பல அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. எந்தவொரு சிறாரும் கைவிடப்படக்கூடாது என்பதே இந்த நாளின் பிரதான நோக்கமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments