
முறையான தராதரங்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அற்ற எல்.ஈ.டி (LED) மின்விளக்குகளை இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகாரசபை (Sri Lanka Sustainable Energy Authority) தெரிவித்துள்ளது. அத்துடன், இவற்றை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
LED மின்விளக்குகளின் உறை, சுற்றடைப்பு அல்லது பெட்டியின் மீது குறைந்தபட்ச ஆற்றல் செயல்திறன் லேபிளை (Minimum Energy Performance Label) காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரால் தரமற்ற LED மின்விளக்குகள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அத்தகைய இடங்களை முற்றுகையிட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
2020 மே 28 ஆம் திகதியிட்ட 2177/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, 60 வாட் (60W) அல்லது அதற்கு குறைவான LED மின்விளக்குகளில், குறைந்தபட்ச ஆற்றல் செயல்திறன் லேபிளை ஒட்டாமல் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
மேலும், பொதுமக்கள் இவ்வாறான தரமற்ற மின்விளக்குகளை வாங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



0 Comments