
ஜாவா கடலில் 243 பயணிகளுடன் பயணித்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை மாயமான ‘வர்ஜோ டிரான்ஸ்போர்ட் 8’ பயணிகள் கப்பல் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 108 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 129 பேரைத் தேடும் நடவடிக்கைகள் திங்கட்கிழமை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தோனேஷிய கடற்படை, கரையோரக் காவல் படை மற்றும் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகவரகம் ஆகியவை இணைந்து நூற்றுக்கணக்கான பணியாளர்களுடன் மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
மீட்புப் பணிகளுக்காக 622 பணியாளர்கள், 17 கப்பல்கள், ஐந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், சுமார் 3 மீற்றர் உயரத்துக்கு எழும் ராட்சத அலைகள் மற்றும் பலத்த காற்று காரணமாகக் கவிழ்ந்த கப்பலுக்கு அருகில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், நீருக்கடியில் மீட்புக் குழுவினரை இறக்குவதிலும் கடும் சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலைகளின் சீற்றம் கப்பலின் வலது பக்கத்தில் பலமாக மோதியதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்து பின்னர் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த கப்பல் 500 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்பதால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பயணிகள் அதில் ஏற்றிச் செல்லப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் துடி பூர்வகந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டுப்பாட்டு மையமான ‘டிரிசக்தி’ துறைமுகத்திலிருந்து சுமார் 80 கடல் மைல்கள் (150 கிலோமீற்றர்) தொலைவில் விபத்து இடம்பெற்றுள்ளதால், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தைச் சென்றடைய வழக்கமான நேரத்தைவிட இரண்டு மடங்கு காலம் எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



0 Comments