
சவூதி அரேபியாவில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை அவசரமானதும் மனிதாபிமானதுமான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அனோஜனுக்கு எதிரான ஆரம்ப தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரது முன்னைய தண்டனையை அதிகரித்து மரண தண்டனை விதித்துள்ளதாக பல்வேறு தகவல் மூலங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படுவதாக பேரவை குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவூதி அரேபியாவின் உயர்ந்த நீதிமன்றத்தில் இறுதி மேன்முறையீட்டை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக பேரவை தெரிவித்துள்ளது. எனினும், அதற்குத் தேவையான சட்டச் செலவுகளை இலங்கையில் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த அனோஜனின் குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்வது கடினம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, அனோஜன் தொடர்பான வழக்கில் உண்மையில் இடம்பெற்ற சம்பவம் என்ன, இதுவரை இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் என்ன, அனோஜனின் தற்போதைய நிலைமை என்ன என்பது தொடர்பில் தெளிவான தகவல்களை நாடாளுமன்றத்திலும் பொதுமக்கள் முன்னிலையிலும் அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் பேரவை கோரியுள்ளது.
Facebook-இல் பதிவிட்ட கருத்தை அனோஜன் பின்னர் உடனடியாக மீளப்பெற்று நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியிருந்தார் எனவும் பேரவை தெரிவித்துள்ளது.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை எனவும் பேரவை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் நட்புறவு மற்றும் நல்லுறவை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை, இலங்கையின் அபிவிருத்திக்கு சவூதி அரேபியா வழங்கி வரும் ஆதரவையும் உதவிகளையும் இலங்கை மக்கள் மதிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சவூதி அரேபியா தனது மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் அனோஜனின் நிலைமையை கருணையுடன் பரிசீலித்து, அவரது உயிரைக் காப்பாற்றும் வகையில் அரச மன்னிப்பு வழங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனோஜனுக்கு எந்தவொரு தண்டனையும் வழங்காமல் அவரது உயிரைக் காப்பாற்றுமாறும், அவருக்கு அரச மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை மரியாதையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும், கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பதில் பொறுப்பாளருக்கும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவை இந்தப் பேரவையில் அங்கம் வகிக்கின்றன.
நன்றி...!
jaffna-muslim



0 Comments