
வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும் ஒதுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் பதிலளிக்கையில்..
இலத்திரனியல் சாதனங்களைத் திருத்துவதற்கு எமக்கு ஆசிரியர்களின் குறைபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும், தற்போது அதற்காக ஆசிரியர்களைப் பணிக்கமர்த்துவதற்கான வேலைகளை முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அடுத்த வருட ஆரம்பத்தில் ஒரு ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் ஊடாக இந்தக் குறைபாடு தீர்க்கப்படும்.
தற்போது குறித்த ஆளணி சேர்ப்பிற்கான பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்த வருடமே அதற்குரிய செயற்பாடுகள் முடிவுறும். தற்போது காணப்படுகின்ற அந்த ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறையில், ஐம்பது சதவீதமான ஆளணிப் பற்றாக்குறை இந்த வருடத்திற்குள்ளேயே நிரப்பப்படும். அதேவேளை, அந்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகளையும் நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றார்.



0 Comments