Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை நிராகரிக்கும் பொலிஸாருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை...!



டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை (Digital Insurance Cards) பரிசோதிப்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை மீறி, சாரதிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர எச்சரித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், பாதுக்கை மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த சிலர் டிஜிட்டல் காப்பீட்டு அட்டைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் உள்ளது. காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டின் முன்னணி 14 காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் இந்த அட்டைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாரதியிடம் டிஜிட்டல் காப்புறுதி அட்டை இல்லாத சந்தர்ப்பத்தில் கூட, *1338# என்ற USSD குறியீடு, 1338 குறுஞ்செய்தி (SMS) அல்லது 1338 உடனடி அழைப்பு மையம் (Call Center) ஊடாக வாகன இலக்கத்தை உள்ளீடு செய்து காப்புறுதி செல்லுபடியாகும் நிலையை பொலிஸார் இலவசமாகவே உறுதிசெய்து கொள்ள முடியும்.

எனவே, நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஊடாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பொலிஸ் அதிகாரி டிஜிட்டல் அட்டையை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் அல்லது 070 47 55 600 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments