
நாட்டில் இன்றைய தினமும் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யுமானால், அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது அத்தனகலு ஓயா மற்றும் களு கங்கையின் மில்லகந்த மற்றும் எலகாவ ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் உயர்மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, களனி கங்கையின் நீர் மட்டம் அதிவேகமாக உயராவிட்டாலும், படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இருப்பினும் இதுவரை வெள்ள அபாயம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நில்வலா, கிங், களனி, களு, அத்தனகலு மற்றும் பெந்தர ஆகிய அனைத்து ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளிலும் நீர் மட்டம் தற்போது ஓரளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் வானிலை நிலவரத்திற்கு ஏற்ப நீர் மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், குறித்த ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் விழிப்புடனும் அவதானத்துடனும் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



0 Comments