
சீனாவின் 'போயாகோங்டாவ் மரைன் டெக்னாலஜி குரூப்' தயாரித்த, உண்மையான மீனைப் போன்றே அசைவுகளை வெளிப்படுத்தக்கூடிய 'BG-5 கோல்டன் டிராகன் பிஷ்' ரோபோ பீஜிங்கில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
'அரோவானா' என்றழைக்கப்படும் கோல்டன் ட்ராகன் மீனின் தோற்றத்தைக் கொண்டுள்ள இந்த ரோபோ, நீருக்கடியிலான உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நவீன 'பயோமிமடிக்' தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
BG-5 எனப்படும் நீருக்கடிப் ரோபோ 3 கிலோ கிராம் எடையுடனும், 640 மில்லிமீற்றர் நீளமும், 204 மில்லிமீற்றர் அகலமும், 90 மில்லிமீற்றர் உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ அதிகபட்சமாக 5 மீற்றர் ஆழம் வரை இயங்கக்கூடியதுடன், வினாடிக்கு 0.6 மீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
வழக்கமான மின்விசிறி பயன்படுத்தப்படாத இந்த ரோபோ, அதன் வாலின் அலை போன்ற அசைவின் மூலம் முன்னோக்கி நகர்கிறது. இதன் வால் 07 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, 03 இணைப்புகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
03 கிலோ எடை கொண்ட சிறிய வடிவம் மற்றும் மீனைப் போன்ற இயக்கம் காரணமாக, பெரிய ரக நீருக்கடி வாகனங்கள் செல்ல முடியாத ஆழமற்ற மற்றும் குறுகிய கடற்பகுதிகளில் எதிரிப் படைகளின் கண்ணில் படாமல் இரகசிய உளவு பார்க்கப் பயன்படுத்தப்படலாம்.
இதன் மேம்படுத்தப்பட்ட BG-5V மொடலானது பாதை திட்டமிடல், பணி ஒதுக்கீடு மற்றும் பல ரோபோக்கள் ஒன்றுசேர்ந்து குழுவாக இயங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இத்தொழில்நுட்பத்தைத் தயாரித்த போயாகோங்டாவ் நிறுவனம், ஏற்கனவே சீன இராணுவப் பிரிவுடன் இணைந்து 'ROBO-SHARK' என்ற சுறா வடிவ பயோமிமடிக் ரோபோவை உருவாக்கியுள்ளதுடன், தேசிய பாதுகாப்புத் திட்டங்களிலும் பங்கேற்று வருகிறது.



0 Comments