
இலங்கையை முறையான வகையில் கட்டியெழுப்புவதற்கு பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், நாட்டின் அரசியல் கலாசாரத்திலும் பாரிய மாற்றம் ஏற்படுவது அத்தியாவசியமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியில் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
"ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும், மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் போது சமூகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதேபோலவே நாட்டின் அரசியலிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் பொதுமக்கள் மீது அதிகாரம் செலுத்துபவர்களாகவும், பொதுமக்கள் அரசியல்வாதிகளுக்கு அஞ்சிய அல்லது கட்டுப்பட்ட நிலையிலுமே வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த நல்லுறவு அவசியமாகும்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ பதவியேற்ற பின்னர், தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளை அரசியலுக்குள் கொண்டு வந்து குடும்ப அரசியலை வளர்த்தெடுக்கும் போக்கே காணப்பட்டது.
தந்தை ஜனாதிபதியாக இருந்தால் மகனும் ஜனாதிபதியாக வேண்டும், தந்தை பிரதமராக இருந்தால் மகனும் பிரதமராக வேண்டும், தந்தை அமைச்சராக இருந்தால் மகனும் அமைச்சராக வேண்டும் என்ற நிலமையே இருந்தது.
இத்தகைய அரசியல் பழைய யுகத்துக்குரியதே தவிர, நவீன அரசியலுக்கு ஏற்றதல்ல.
அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது மனைவியை தனிப்பட்ட செயலாளராகவும், மகனை ஒருங்கிணைப்புச் செயலாளராகவும் நியமித்து குடும்ப ஆட்சியை நடத்தும் நிலமையே காணப்பட்டது.
இன்று அந்த மனைவி சிறையில் இருக்கிறார் அல்லவா?
சபாநாயகர் ஒருவர் தனது பரம்பரையையே நாடாளுமன்றத்திற்குள் வைத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றன.
எனினும், கடந்த 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி நாட்டின் மக்கள் எடுத்த தீர்மானத்தின் மூலம் இந்த பழைய அரசியல் முறைமை மாற்றியமைக்கப்பட்டு, ஒரு புதிய அரசியல் பாதை உருவாக்கப்பட்டுள்ளது" என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.



0 Comments