
இலங்கையின் பிரதான அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றான ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 2026–2029 காலப்பகுதிக்குரிய இலங்கை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் ஷெனன் கௌலின் (Shannon Cowlin) ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2027 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, 2026 ஒக்டோபர் 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நடத்தப்படும் திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கான பூர்வாங்கக் கலந்துரையாடலாகவே இக்கூட்டம் இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால திட்ட வரைபுக்குள் உள்வாங்குவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களை இனங்காண்பது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவித் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உரிமையை உறுதிப்படுத்தல், அரச நடைமுறைகளுக்கும் வங்கியின் நடைமுறைகளுக்கும் இடையில் பயனுள்ள ஒருங்கிணைப்பைப் பேணுதல் என்பன குறித்து ஆராயப்பட்டது.
மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சலுகை அடிப்படையிலான நிதியியல் வளங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி வேகத்தைத் துரிதப்படுத்தி, அரச நிதி இலக்குகளை விரைவாக அடைவதில் எழும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கான முறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலதிக செயலாளர் டப்ளியு. டி. ஆர். கிரிசாந்த, ஜனாதிபதி சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி தனுஷ்க பெரேரா உள்ளிட்டோரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



0 Comments