
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.
2026 நவம்பர் முதலாம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடல் வானிலை முன்னறிவிப்பின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கம், ஒக்டோபர் 31ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் வட அகலாங்கு 10.9 பாகை மற்றும் கிழக்கு நெட்டாங்கு 87.5 பாகை ஆகிய நிலைகளுக்கு அருகில் மையம் கொண்டிருந்தது.
இந்தத் தாழமுக்கம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் முதலாம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஆழ்ந்த தாழமுக்கமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அன்றிரவு 11.30 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை அண்மித்த மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நவம்பர் 2ஆம் திகதியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் இது மேலும் வலுப்பெற்று தீவிர சூறாவளியாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட அகலாங்கு 10 முதல் 15 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலுமான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசும்.
ஏனைய கடற்பரப்புகளில் தென்மேற்குத் திசையிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசையின்றி காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வரை காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதன்போது கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



0 Comments