ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என நம்பகமான அச்சுறுத்தல் கிடைத்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (ஒக்டோபர் 31) தொடர்பில் விடுக்கப்பட்டுள்ளது.
மொஸ்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான பொதுப் பூங்காவும் வரலாற்றுச் சிறப்புமிக்க வளாகமுமான சாரிட்சினோ அருங்காட்சியகப் பூங்கா (Tsaritsyno Museum Reserve) தாக்குதலுக்கான சாத்தியமான இலக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலிருந்து விலகியிருக்குமாறும், அவதானத்துடன் செயற்படுமாறும் அமெரிக்கத் தூதரகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் அமெரிக்கா ஏற்கனவே ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக வொஷிங்டன் தெரிவித்துள்ளது.
சாத்தியமான தாக்குதலின் தன்மை குறித்தோ அல்லது இதன் பின்னணியில் யார் இருக்கலாம் என்பது குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், இதுவரை எந்தவொரு தாக்குதலும் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால், தாக்குதல் இடம்பெறக்கூடிய குறிப்பிட்ட இடத்தையும் திகதியையும் சுட்டிக்காட்டி அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



0 Comments