வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிவரும் திரைப்படம் ‘விடுதலை’. விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்ற கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் பாகம் ஏற்கனவே போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருப்பதால், வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசுத் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments