Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!


சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைவருக்கும் வலியுறுத்தும் நோக்கில் 1948, டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொது சபையால் உலக மனித உரிமைகள் தினம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.

விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் அதி உச்சத்திலிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வசித்து வருகிறோம். மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் மிக அதிகமாகவே பேசி வருகிறோம். ஆனால் நாகரீகமடைந்த சில மனித மனங்கள் மிருகங்களை விட மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது என்பதற்கு நாம் வாழும் உலகிலேயே பல நிதர்சனங்களை சந்தித்து வருகிறோம்.

நாகரீகமும், விஞ்ஞானமும் வளர வளர மனிதர்களை வதைச்செய்யும் உத்திகளும் நவீனமடைந்து வரும் அவலநிலையும் தொடர்கிறது. மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதும் அல்ல. எனவே ஒருவரின் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை.

1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவான அடுத்தாண்டு, பிப்ரவரி மாதம் 16ம் தேதி ஐக்கிய நாடுகள் 'மனித உரிமை ஆணைக் குழு' உதயமானது. ஐம்பத்து மூன்று நாடுகளை அங்கமாகக் கொண்ட இக்குழு, முதல் வேலையாக 'சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தை உருவாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.



இக்குழுவின் சிபாரிசின் படி 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகள் இனங்காணப்பட்டு அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 10, 1948ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் இந்தப் பிரகடனத்திற்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியது. டிசம்பர் 10 என்ற இதே நாளை 1950ம் ஆண்டிலிருந்து 'சர்வதேச மனித உரிமைகள் தினமாக' அறிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத்தில் பிறக்கும் எல்லா மனிதர்களும் சமமான உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் கொண்டிக்கின்றனர் என்ற உண்மையை தான் இந்த நாளில் உலகம் உரத்து கூற வேண்டியது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விஷயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் இந்த தினம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பது சில சமூகவியலாளர்களின் கருத்து. ஆனால் தனது இனத்தைச் சார்ந்தவர்களையே காட்டுமிராண்டித்தனமாக கொடுமைப்படுத்தி அல்லலுக்கு ஆளாக்கும் விநோதத்தை மனிதர்களிடையே மட்டுமே நாம் காண இயலும்.

Post a Comment

0 Comments