நடிகை: சிரி பிரகலாத்
டைரக்ஷன்: ரிஷிகா சர்மா
இசை: கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : கீர்த்தன் பூஜாரி
கர்நாடக தொழில் அதிபர் விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கையை தழுவி வந்துள்ள படம். அச்சக தொழில் நடத்தும் சங்கேஸ்வரரின் மூன்று மகன்களில் ஒருவர் விஜய் சங்கேஸ்வரர். இவர் தனது தந்தையின் தொழில் பிடிக்காமல் லாரி வாங்கிவிட ஆசைப்படுகிறார். தந்தை எதிர்ப்பை மீறி கடன் பெற்று லாரி வாங்கி தொழிலை தொடங்குகிறார்.
அதில் எதிர்பார்த்த லாபம் இல்லை. அனாலும் சோர்ந்து போகாமல் மேலும் நான்கு லாரிகள் வாங்குகிறார். பல இடையூறுகள் வருகிறது. அதை சமாளித்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் கொண்ட கம்பெனிக்கு உரிமையாளராகி எப்படி பெரிய தொழில் அதிபராக உயர்கிறார் என்பது மீதி கதை. விஜய் சங்கேஸ்வரர் கதாபாத்திரத்தில் வரும் நிஹால் அமைதி, வைராக்கியம், நம்பிக்கையின் மொத்த வெளிப்பாடாக மாறி கதாபாத்திரத்தில் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறார். அவமானங்களை அமைதியாக கடந்து செல்லும்போது மனதில் நிற்கிறார்.
இவரது மனைவியாக வரும் சிரி பிரகலாத் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனாக வரும் பாரத் போபனாவும் வயதுக்கு மீறிய யதார்த்த நடிப்பை கொடுத்துள்ளார். பத்திரிகை தொடங்கி அதை வேறு ஒருவருக்கு தந்தை விற்கும்போது எதிர்ப்பு காட்டாமல் மனதுக்குள்ளேயே வருந்துவது.
இன்னொரு பத்திரிகை நடத்த அதன் பெயர் உரிமையை வாங்க சென்று அவமானப்படும் காட்சிகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகள் சுவாரஸ்யம் இல்லாமல் நாடகத்தனமாய் கடந்து செல்கிறது. நிஜ வாழ்க்கை கதையை எந்த சமரசமும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக சொல்லி கவனம் பெறுகிறார் இயக்குனர் ரிஷிகா சர்மா. கோபி சுந்தர் இசையில் பாடல்கள் மனதில் நிற்கின்றன. கீர்த்தன் பூஜாரியின் கேமரா ஒவ்வொரு காலகட்டத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டி உள்ளது.
0 Comments