இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது.
இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன.
சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும் அவுஸ்திரேலியா (75.56 புள்ளிகள்), இந்தியா (58.93 புள்ளிகள்), இலங்கை (53.33 புள்ளிகள்), தென் ஆபிரிக்கா (48.72 புள்ளகள்) ஆகிய 4 அணிகள் இறுதிப் போட்டிக்கான 2 வாய்ப்புகளுக்கு குறிவைத்து தத்தமது கடைசி டெஸ்ட் தொடர்களை எதிர்கொள்ளவுள்ளன.
தற்போது முதல் இரண்டு இடங்களிலுள்ள அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு அணிகளுக்கும் இலங்கையும் தென் ஆபிரிக்காவும் கடும் போட்டித் தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இந்த நான்கு நாடுகள் சம்பந்தப்பட்ட டெஸ்ட் தொடர்களில் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெறுவதால் அத் தொடரின் முடிவு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அணிகளைப் பெரும்பாலும் தீர்மானித்துவிடும் என கருதப்படுகிறது.
தற்போதைய சதவீத புள்ளிகளின் அடிப்டையில் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அவுஸ்திரேலியா அதிகரித்துக்கொண்டுள்ளது. எனினும் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டதால் அதன் இறுதி ஆட்ட வாய்ப்பு உறுதிசெய்யப்படுவது இந்தியாவுடனான தொடர் முடிவுவரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
2021 - 2023 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான பருவகாலம் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந் நிலையில் அவுஸ்திரேலியாவினதும் இந்தியாவினதும் கடைசி டெஸ்ட் தொடர் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.
அவுஸ்திரேலியாவின் வாய்ப்பு
போர்டர் - காவஸ்கர் கிண்ணத்துக்காக நடைபெறும் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 0 - 4 என தோல்வி அடைந்தால் அதன் சதவீத புள்ளி 59.65ஆக குறையும். இந் நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மாத்திரமே அவுஸ்திரேலியாவின் இறுதி ஆட்ட வாய்ப்பு அற்றுப் போகும். ஆனால், நியூஸிலாந்து மண்ணில் இலங்கையினால் சாதிக்க முடியும் என எதிர்பார்க்க முடியாது.
இந்தியாவின் வாய்ப்பு
தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை 3 - 1 அல்லது அதனைவிட சிறந்த தொடர் வெற்றியை ஈட்டினால் இந்தியா இயல்பாகவே இறுதி ஆட்டத்தில் விளையாட தகுதிபெறும். மற்றைய தொடர் முடிவுகள் எப்படி அமைந்தாலும் அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
ஒருவேளை தொடர் 2 - 2 என சமநிலையில் முடிவடைந்தால் இந்தியாவின் சதவீத புள்ளி 56.94 ஆக குறையும். அப்படி குறைந்தால் இந்தியாவுக்கு முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெற முடியாமல் போகும். மேலும் மேற்கிந்தியத் தீவுகளை தென் ஆபிரிக்கா 2 - 0 என வெற்றிகொண்டால் இந்தியா 4ஆம் இடத்திற்கு பின்தள்ளப்படும். ஆனால் இவை அனைத்தும் சாத்தியப்படக்கூடியவை அல்லவென்பதால் இந்தியா இரண்டாவது தொடர்ச்சியான தடவையாகவும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெறும் என கருதப்படுகிறது.
இலங்கையின் வாய்ப்பு
தற்போது 53.33 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கும் இலங்கை, மார்ச் மாதம் நடைபெறவுள்ள நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாக வெற்றிபெற்றால் அதன் சதவீத புள்ளி 61.11ஆக உயரும். அதேவேளை அத் தொடர் 1 - 1 என சம நிலையில் முடிவடைந்தால் இலங்கையின் சதவீத புள்ளி 52.78ஆக இருக்கும். இந் நிலையில் டெஸ்ட் தொடரில் இந்தியா 1 - 3 அல்லது 0 - 1 என அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால் இலங்கை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.
தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு
அவுஸ்திரேலியாவில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 2 என தோல்வி அடைந்ததால் தென் ஆபிரிக்காவின் இறுதி ஆட்ட வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 48.72 சதவீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது கடைசி டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 2 - 0 என முழுமையாக வெற்றிகொண்டால் அதன் சதவீத புள்ளி 55.56 ஆக உயரும்.
நியூஸிலாந்துடனான தொடரில் இலங்கை 1 - 0 என வெற்றிபெற்று இந்தியாவினால் 21 புள்ளிகளுக்குமேல் பெற முடியாமல் போனால் அவுஸ்திரேலியாவுடன் தென் ஆபிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
ஏனைய அணிகள்
சதவீத அடிப்படையில் இங்கிலாந்து (46.97 புள்ளிகள்), மேற்கிந்தியத் தீவுகள் (40.91 புள்ளிகள்), பாகிஸ்தான் (38.10 புள்ளிகள்), நடப்பு சம்பியன் நியூஸிலாந்து (27.27), பங்களாதேஷ் (11.11 புள்ளிகள்) ஆகிய அணிகள் அடுத்த 5 இடங்களில் இருக்கின்றன. அவற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நியூஸிலாந்துக்கும் தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் மிஞ்சியிருக்கின்றபோதிலும் அந்த அணிகளால் பெறப்படும் அதிகபட்ச புள்ளிகள் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற போதுமானதாக அமையப்போவிதில்லை.
எனவே, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற நான்கு முனை போட்டி நிலநிலவப்போகிறது.
0 Comments