இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்யும் ‘தமிழ்க்குடிமகன்' என்ற புதிய படத்தில் சேரன் கதாநாயகனாக நடிக்கிறார்.
சேரன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் 'தமிழ்க்குடிமகன்'. இதில் நாயகியாக ஶ்ரீபிரியங்கா நடித்துள்ளார். லால், எஸ்.ஏ.சந்திரசேகர், வேலராமமூர்த்தி, தீபிஷா, அருள்தாஸ், ரவிமரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்துள்ளார். படம்பற்றி அவர் கூறும்போது, "சமூகத்தில் சாதிய கட்டமைப்பை உடைக்க தனிமனிதனாக போராடும் ஒருவரைப் பற்றிய கதையே இந்தப் படம். குலத்தொழில் முறை ஒழிந்தாலும், அதை மையப்படுத்திய சாதி ஒழியவில்லை.
சாதி அடையாளத்தினால் சமூகத்தோடு ஒன்றி வாழ முடியவில்லை என்று பலர் குமுறுகின்றனர். அதற்கு விடை தரும் படமாக உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் கதையாலும் பாடல்களாலும் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி, படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார், என்றார்.
சேரன் கூறும்போது, "நான் அழுத்தமாகச் சொல்ல நினைத்த விஷயத்தைத்தான் இசக்கி கார்வண்ணன் சொல்லியிருக்கிறார். சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி" என்றார். இசை: சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு: ராஜேஷ்யாதவ்.
0 Comments