Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பேலேயின் இறுதிச் சடங்குகள் நாளை மறுதினம்...!


பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் இறுதிச் சடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேலேயின் பூதவுடல், அவர் நீண்டகாலமாக விளையாடிய சான்டோஸ் கால்பந்தாட்டக் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை திங்கட்கிழமை காலை முதுல் செவ்வாய்க்கிழமை காலை வரை வைக்கப்படவுள்ளது. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை அவரின் இறுதிச் சடங்குகள் சான்டோஸ் நகரில் நடைபெறும்.

பேலேயின் தாயாரான, அண்மையில் 100 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய செலேஸ்ட் தங்கியுள்ள வீட்டையும் பேலேயின் இறுதி ஊர்வலம் கடந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேலே, தனது 82 ஆவது வயதில் கடந்த வியாழக்கிழமை காலமாகியமை குறிப்பிடத்தக்கது.

பேலேயின் மறைவையொட்டி, பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ 3 நாட்களை துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

கால்பந்தாட்டத்தின் மன்னன்

3 உலகக்கிண்ணங்களை வென்ற ஒரேயொரு வீரர் கால்பந்தாட்ட வீரர் பேலே ஆவார். கால்பந்தாட்டத்தின் மன்னன் என புகழப்படுபவர் அவர்.

1940 ஆம் ஆண்டு பிறந்த பேலேயின் உண்மையான பெயர் எட்ஸன் அராரான்டஸ் டோ நசிமென்டோ. பேலே என்பது பாடசாலைக் காலத்தில் சூட்டப்பட்ட அவரின் பட்டப்பெயர்தான்.



1958, 1962, 1970 ஆம் ஆண்டுகளின் உலகக்கிண்ணப் போட்டிகளில் பிரேஸில் சம்பியனாகுவதற்கு பேலே பெரும் பங்காற்றினார்.



1970 ஆம் ஆண்டின் உலகக்கிண்ணத்துடன் பேலே

1971 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றபோது 92 போட்டிகளில் 77 கோல்களைப் புகுத்தி பிரேஸில் சார்பாக அதிகூடிய கோல் புகுத்திய வீரராக பேலே விளங்கினார். அச்சாதனையை 51 ஆண்டுகளின் பின் கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளில், நெய்மார் தனது 124 போட்டியில் சமப்படுத்தினார்.

1954 முதல் 1974 ஆம் ஆண்டுவரை பிரேஸிலின் சான்டோஸ் கழகத்துக்காக மாத்திரமே பேலே விளையாடினார். அக்கழகத்துக்காக 636 போட்டிகளில் 613 கோல்களை அவர் புகுத்தினார். பிற நாடுகளின் கழகங்கள் பேலேவை ஒப்பந்தம் செய்வதை தடுப்பதற்காக, பேலேவை தேசிய சொத்து என, 1961 ஆம் ஆண்டு அப்போதைய பிரேஸில் ஜனாதிபதி ஜானியோ க்வாத்ரோஸ் பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக 1974 ஒக்டோபரில் பேலே அறிவித்தார். அதன் பின்னர், அமெரிக்காவின் நியூ யோர்க் கொஸ்மோஸ் கழகத் தலைவரின் கோரிக்கையின் பேரில் 1975 முதல் 1977 வரை அக்கழகத்துக்காக 64 போட்டிகளில் விளையாடி 37 கோல்களைப் புகுத்தினார்.



தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில் உத்தியோகபூர்வமற்ற போட்டிகள் உட்பட 1,363 போட்டிகளில் 1,283 கோல்களைப் புகுத்தி அவர் உலக சாதனை படைத்தார்.

கால்பந்தாட்ட வாழ்க்கையில் அதிக (1283) கோல்களைப் புகுத்தியமைக்காகவும், 3 உலகக் கிண்ணங்களை வென்றமைக்காகவும் கின்னஸ் உலக சாதனை சான்றிதழ்களை பேலேவிடம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் 2013 ஆண்டு கையளித்தனர்.

1999 ஆம் ஆண்டில் நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக பேலேவை சர்வதேச ஒலிம்பிக் குழு பிரகடனப்படுத்தியது. அத்துடன் நூற்றாண்டின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை பேலலேவுக்கும் ஆர்ஜென்டீனாவின் டியகோடி மரடோனாவுக்கும் 2000 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) வழங்கியிருந்தது.

Post a Comment

0 Comments