ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவர் லயனல் மெஸி, தனது 100 ஆவது சர்வதேச கோலைப் புகுத்தியுள்ளார்.
கியூராசாவ் - ஆர்ஜென்டீன அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியில் தனது 100 கோலை மெஜி புகுத்தினார்.
ஆர்ஜென்டீனாவின் சான்டியாகோ டெல் எஸ்டேரோ நகரில் செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று காலை) நடைபெற்ற இப்போட்டியில் 7-0 கோல்களால் ஆர்ஜென்டீனா வென்றது.
இப்போட்டியில் லயனல் மெஸி ஹெட்ரிக் கோல்களைப் புகுத்தினார். போட்டியின் 20, 33, 37 ஆவது நிமிடங்களில் அவர் புகுத்தினார் இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மெஸி புகுத்திய கோல் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்தது.
2006 ஆம் ஆண்டு குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் மெஸி தனது முதல் சர்வதேச கோலைப் புகுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசெம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று போட்டியில் சம்பியனாகிய பின்னர் ஆர்ஜென்டீனா விளையாடிய 2 ஆவது போட்டி இதுவாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பனாமாவுடனான போட்டியில் ஆர்ஜென்டீனா 2:0 விகிதத்தில் வென்றது. அப்போட்டியில் மெஸி ஒரு கோலைப் புகுத்தியிருந்தார்.
ஆர்ஜென்டீனா சார்பில் அதிக கோல்களைப் புகுத்திய வீரர்களில் மெஸிக்கு அடுத்ததாக கெப்ரியேல் படிஸ்டுவா 56 கோல்களையும் சேர்ஜியோ அகுவேரா 41 கோல்களையும் புகுத்தியுள்ளனர்.
சர்வதேச ரீதியில் ஆகக் கூடுதலான கோல்களைப் புகுத்திய வீரர்களில் லயனல் மெஸி 3 ஆவது இடத்தில் உள்ளார். போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 கோல்களையும் ஈரானிய வீரர் அலி தாயி 109 கோல்களையும் புகுத்தியுள்ளனர்.
0 Comments