அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.
எனினும் எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த குறித்த கப்பல் 22ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சீனாவின் எதிர்ப்பை மீறி ஜெர்மனி ஆய்வுக் கப்பல் இரண்டாவது தடவையாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகை இன்று(28) செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் நாம் வினவிய போது பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த கப்பலுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி மீண்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கப்பல் பணியாளர்களை மாற்றம் செய்யவும் எரிபொருள் உள்ளிட்ட சேவை வசதிகளை பெறவும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் தமது நாட்டிற்கு சொந்தமான கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படாத நிலையில் சீனா எதிர்ப்பை வௌியிட்டிருந்தது.
ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும்.
2023ஆம் ஆண்டு முதல் 14 மாதங்களுக்குள் 2 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தமையினாலேயே இருநாடுகளும் இது தொடர்பிலான கரிசனைகளை வௌிப்படுத்தியிருந்தன.
0 Comments