பாரிஸ்: ஒலிம்பிக் தொடரின் ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து ஸ்பெய்ன் அணி களமிறங்கியது. இந்திய அணியின் நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் கடைசி போட்டி என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் முதல் குவார்ட்டர் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஸ்பெயின் அணி வீரர்கள் தீவிரமான அட்டாக்கை மேற்கொண்டனர்.
ஆனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 2வது குவார்ட்டரில் இந்திய அணி செய்த தவறு காரணமாக ஸ்பெயின் அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஸ்பெயின் அணியின் கேப்டன் மார்க் மிரால்ஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் 2வது குவார்ட்டரின் கடைசி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. 2வது குவார்ட்டர் முடிய 20 வினாடிகளே இருந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் பரபரப்பானது. தொடர்ந்து 3வது குவார்ட்டரின் முதல் சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அதில் மீண்டும் ஹர்மன்ப்ரீத் 2வது கோலை அடித்து மிரட்டினார். இதன் மூலமாக இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின் 4வது குவார்ட்டரில் ஸ்பெய்ன் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். முதல் சில நிமிடங்களிலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் அடிக்க தவற நிலையில், தொடர்ந்து இந்திய வீரர்கள் டிஃபெண்டிங் ஆட்டத்தில் கவனம் செலுத்தினர்.
கடைசி 10 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாகினர். அதிகளவிலான லாங் பாஸ் தொடர்ந்து செய்யப்பட்டது. இந்த சூழலில் கடைசி 3 நிமிடங்கள் இருக்கும் போது, ஸ்பெய்ன் அணி கோல் கீப்பர் இல்லாமல் கூடுதல் அட்டாக்கரை களமிறக்கியது. சரியாக 90 வினாடிகள் இருந்த போது, ஸ்பெய்ன் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அதனை இந்திய டிஃபெண்ட் செய்ய, மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அசராமல் நின்று தடுத்து நிறுத்தினார். அதனை ஸ்பெய்ன் அணி ரிவ்யூ செய்தும் பலனளிக்கவில்லை. கடைசி நேரத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்த போதும், ஸ்பெய்ன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலமாக இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. அதேபோல் 52 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 2 ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று ஹாக்கி அணி சாதனை படைத்துள்ளது.
0 Comments