Trending

6/recent/ticker-posts

Header Ads Widget





பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் வரலாறு எழுதப்படும் பொழுது, அதில் மறைந்த பன்முக ஆளுமையான "வேதாந்தி " சேகு இஸ்ஸதீனும் இடம்பெறுவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சில காலமாக தீவிரமாக நோய்வாயுற்றிருந்த நண்பர் சேகு இஸ்ஸதீன் எம்மை விட்டு மறைந்த செய்தியறிந்து மிகவும் கவலையடைந்தேன். இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எங்களது ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்பின் அரசியல் பாசறையில் ஆரம்ப காலத்திலேயே பிரவேசித்துப் புடம் போடப்பட்ட ஒருவராக நான் அவரைக் காண்கின்றேன்.

தலைசிறந்த கவிஞராக விளங்கிய அவர், ஆங்கில ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பேச்சாளராகவும், சட்டத்தரணியாகவும் அரசியல் ஞானம் உடையவராகவும், பிரதி அமைச்சராகவும், சமூகப்பற்றுக் கொண்டவராகவும் பல்வேறு மட்டங்களில் சிறந்து விளங்கினார்.

எங்களது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் சகவாசம் அன்னாருக்கு கட்சியை ஸ்தாபித்த ஆரம்ப காலத்திலேயே வாய்த்திருந்தது. அவருடன் ஒன்றாகப் பயணித்தவரான அவர் தலைவரினதும், மக்களினதும் பாதுகாப்பிலும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றார்.

அவரது வகிபாகம் ஒவ்வொரு படித்தரங்களிலும் இருந்து வந்திருக்கின்றது. அவற்றிற்கெல்லாம் மகுடமாக இலங்கை அரசியலில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட முதலாவது இணைந்த வட கிழக்கு மாகாண சபையில் 17 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு அச்சமற்ற சூழ்நிலை ஏற்படுத்தப் பட வேண்டுமென அவர் நிபந்தனை கூட விதித்திருந்தார்.

எங்களை விட்டுப் பிரிந்து சென்றிருக்கின்ற நண்பர் சேகு இஸ்ஸதீனை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு மேலான ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற சுவன வாழ்வை அன்னாருக்கு வழங்குவானாக ,அன்னாரின் பிரிவினால் துயறுற்றிருக்கும் மனைவி, மக்களுக்கும் உற்றார், உறவினர்களுக்கும் அவரை நேசித்தவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும் , தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Post a Comment

0 Comments