ஷார்ஜாவில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக ஷார்ஜா முனிசிபாலிட்டி நகரில் பல புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ஷார்ஜா எமிரேட்டில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கட்டண பார்க்கிங்கையும் படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. அதன தொடர்ச்சியாக வரும் ஜனவரி 1, 2025 முதல் அல் தைத் சிட்டியில் கட்டண பார்க்கிங் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி, அல் தைத் சிட்டியில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்க்கிங் கட்டணம் அமலில் இருக்கும் என ஷார்ஜா முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், வார இறுதி நாட்கள் மற்றும் உத்தியோகபூர்வ விடுமுறை நாட்கள் உட்பட, வாரம் முழுவதும் கட்டணம் விதிக்கப்படும் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர வெள்ளிக்கிழமைகளில் பார்க்கிங் இலவசமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் எந்தெந்த மண்டலங்கள் பார்க்கிங் கட்டணத்திற்கு உட்பட்டது என்பதைக் குறிக்க, நகரம் முழுவதும் பார்க்கிங் மண்டலங்களில் நீல நிற அடையாள பலகைகள் ஒட்டப்படும் என்றும் ஷார்ஜா முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
எமிரேட்டின் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பொது இடங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்கும் முனிசிபாலிட்டியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்பகுதியில் கட்டண வாகன நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபரில், ஷார்ஜாவில் ஏழு நாள் மண்டலங்களுக்கு புதிய கட்டண பார்க்கிங் நேரத்தை அதிகாரிகள் அறிவித்தனர். இந்த மண்டலங்கள் நீல நிற பார்க்கிங் தகவல் குறியீடுகளால் அடையாளம் காணப்படுகின்றன. திருத்தப்பட்ட நேரத்தின்படி, நவம்பர் 1 முதல் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஷார்ஜாவில் பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த 16 மணி நேர கட்டண பார்க்கிங் இடங்கள் வாரம் முழுவதும் மற்றும் பொது விடுமுறை நாட்களில் செயல்படும். ஷார்ஜாவில், பார்க்கிங் இடங்கள் பொதுவாக நீலம் மற்றும் வெள்ளை நிற கர்ப் அடையாளங்களுடன் குறிக்கப்படுகின்றன, அதனுடன் பயன்பாடு மற்றும் கட்டணங்கள் பற்றிய தெளிவான வழிமுறைகளை வழங்கும் குறியீடுகளையும் ஷார்ஜா முனிசிபாலிட்டி அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments