பிள்ளையானின் அலுவலத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.
அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள்.
விலையுயரந்த அமெரிக்கத் தயாரிப்பான M-16 நவீன இயந்திரத் துப்பாக்கியில், M203 கிரனேட் ஏவிகள் (grenade launchers) பொருத்தப்பட்டிருக்கும் சக்திவாய்ந்த துப்பாக்கிகள்.
அரச படையினர் கூட சாதாரணமாகப் பாவிக்காத இந்தவகைத் துப்பாக்கிகள் மட்டக்களப்பிலுள்ள ஒரு அரசியல் கட்சி அலுவலகத்தில் இருப்பது கண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துப்பாக்கிகள் பற்றி விசாரித்தபோது, 'அந்தத் துப்பாக்கிகள் அங்கு இருப்பது பிள்ளையானுக்குத் தெரியாது என்றும், தானே அவற்றினை மறைத்து வைத்திருப்பதாகவும்' பிள்ளையானுடன் நின்ற ஒருவர் கூறி பழியை ஏற்க முன்வந்திருக்கின்றார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கிகள் முன்னைய அரசாகத்தின் காலகட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறப்பட்டதாம்.
இரண்டு துப்பாக்கிகளும், மட்டக்களப்பு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
முன்னைய அரசாங்கம் பிள்ளையானுக்கு எதற்காக யுத்த களங்களில் பாவிப்படுகின்ற நவீன இயந்திரத் துப்பாக்கிகளை வழங்கியிருந்தது?
சிறிலங்கா காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக எதற்காக நவீன துப்பாக்கிகள் பிரத்தியேகமாக அவருக்கு வழங்கப்பட்டன?
படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் போன்ற சதிநடவடிக்கைகள் பற்றிய சமுகவிரோதக் குற்றச்சாட்டுக்கள் பிள்ளையான் மீதும் பிள்ளையான் குழுக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதற்காக துப்பாக்கிகள் அவருக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருந்தன?
யாரைச் சுடுவதற்காக வழங்கப்பட்டிருந்தன?
அண்மையில் கொழும்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கும், இந்தத் துப்பாக்கிகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
பிள்ளையான் அலுவலகத்துக்கும் பாதாள உலகக் கும்பல் என்று கூறப்படுகின்ற தரப்புக்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா?
துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட விடயத்தை குற்றப்புலனாய்வுப் பிரிவு எதற்காக இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை?
பிள்ளையானைச் சந்திக்க ரணில் ஓடித் திரிவதற்கும் இந்தத் துப்பாக்கி விடயத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா
0 Comments