
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் அரங்கேறுகின்றன.
இதில் மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 45-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
5 முறை சம்பியனான மும்பை அணி 9 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. அந்த அணி தனது கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வாகை சூடி சரியான சமயத்தில் சிறந்த நிலைக்கு திரும்பி இருக்கிறது.
மும்பை அணியில் துடுப்பாட்டத்தில் சூர்யகுமார் யாதவ் (373 ஓட்டங்கள்), திலக் வர்மா (233), ரோகித் சர்மா (228), ரையான் ரிக்கெல்டனும் (215), பந்து வீச்சில் தலைவர் ஹர்திக் பாண்ட்யா, டிரென்ட் பவுல்ட், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ராவும் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
லக்னோ அணியும் 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்வியை அடைந்துள்ளது. அந்த அணி துடுப்பாட்டத்தில் வெளிநாட்டு நட்சத்திரங்களான நிகோலஸ் பூரன் (377 ஓட்டங்கள்), மிட்செல் மார்ஷ் (344), மார்க்ரம் (326) ஆகியோரை அதிகம் நம்பி இருக்கிறது. ஆயுஷ் பதோனியும் ஓரளவு பங்களிப்பை அளிக்கிறார். 106 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ள தலைவர் ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் நம்பிக்கை அளிக்கின்றனர்.
லக்னோவுக்கு எதிரான முந்தைய போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்ட மும்பை அணி அதற்கு பதிலடி கொடுப்பதுடன், தங்களது உத்வேகத்தை தொடர தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை நீட்டிக்க லக்னோ முயற்சிக்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்பு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ அணி 6-1 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு;
மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (தலைவர்), நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, விக்னேஷ் புத்தூர்.
லக்னோ: மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (தலைவர்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்குர், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ்.
இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ்- ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டெல்லி அணி 8 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் துடுப்பாட்டத்தில் லோகேஷ் ராகுல் (323 ஓட்டங்கள்), அபிஷேக் போரெல் (225) ஜொலிக்கின்றனர். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், தலைவர் அக்ஷர் பட்டேல், அஷூதோஷ் ஷர்மா ஆகியோரும் சுமாரான பங்களிப்பை அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் பலம் சேர்க்கின்றனர்.
பெங்களூரு அணி 9 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் துடுப்பாட்டத்தில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் 5 அரைசதங்களுடன் 392 ஓட்டங்கள் எடுத்துள்ளார். பில் சால்ட், தேவ்தத் படிக்கல், தலைவர் ரஜத் படிதாரும் சோபிக்கின்றனர்.
பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் மிரட்டக்கூடியவர்கள்.
சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டியில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 போட்டிகளிலும், டெல்லி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது.
டெல்லி: அபிஷேக் போரெல், போப் டு பிளிஸ்சிஸ், கருண் நாயர், லோகேஷ் ராகுல், அக்ஷர் பட்டேல் (தலைவர்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், துஷ்மந்த சமீர,
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (தலைவர்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
0 Comments