
நாட்டல் பேருந்துக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக அட்டை முறைக்கு வங்கிகள் விதிக்கும் அதிகரித்த தரகு பணம் குறித்து ஐக்கிய போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டணி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
வங்கிகளைப் பணக்காரர்களாக்க நாங்கள் பேருந்துகளை இயக்கவில்லையெனவும் அச்சங்கத்தின் தலைவர் சம்பத் ரணசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட முன் பண அட்டைகள் அல்லது அட்டைகள் மூலம் பணம் செலுத்திப் பேருந்துகளில் பயணிக்கும் வசதியை வழங்குவது குறித்து அரசுக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்தப் புதிய முறையை நீண்ட நாட்களாகத் தாங்கள் எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்து உரிமையாளர்கள் இந்தக் கட்டண முறையை வரவேற்றாலும், இது வங்கிக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அல்லது போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 1 வீதத்தை விடக் குறைவான தரகு பண விகிதம் மட்டுமே வங்கிகளால் அறவிடப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, வங்கிகள் 1.3 வீதம் முதல் 1.8 வீதம் வரையிலான வீதத்தில் தரகு பணத்தை அறவிடத் தயாராகி வருவதாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தங்களுக்கு ஆதங்கத்தை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிக தரகு பண விகிதங்களை ஏற்கப் பேருந்து உரிமையாளர்கள் தயாராக இல்லை என்று சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மிகவும் கடினமான சூழ்நிலையில் பேருந்தை இயக்கி சம்பாதிக்கும் பேருந்துக் கட்டண வருமானத்தில், 1.5 வீதம் வரையிலான தரகுப் பணத்தை வங்கிக்குச் செலுத்தத் தயாராக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு மாதாந்திர சந்தா போல, வங்கிகள் தங்களுக்குக் கிடைக்காமல் போகும் பணத்தை இந்தப் பேருந்து கட்டணத்தில் இருந்து எடுத்துக்கொள்ள முயன்றால், அது மிகவும் அநியாயமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இந்தத் திட்டம் வெற்றியடைய, வங்கிகள் குறைந்த தரகு பண விகிதத்தில் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பிடமும் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.



0 Comments