
இலங்கைகான நெதர்லாந்து தூதுவர் வைபே டி போயர் (Wiebe de Boer) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினியதும சுனில் செனவி ஆகியோருக்கு இடையிலான விசேட சினேகபூர்வ சந்திப்பொன்று பத்தரமுல்ல, செத்சிறிபாயவிலுள்ள அமைச்சக வளாகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதன் போது, காலனித்துவ காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், இலங்கையின் தொல்பொருட்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் உள்ளிட்ட தேசிய மரபுகளைப் பாதுகாக்கும் பணிகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தின் தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் நெதர்லாந்து தூதரகத்தின் கலாசார விவகாரங்களுக்கான சிரேஷ்ட கொள்கை ஆலோசகர் கிறிஷான் மெண்டிஸ் (Chryshane Mendis) உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.



0 Comments