Trending

6/recent/ticker-posts

Live Radio

உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு : ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை...!



மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையில் உள்ளது. இதன் தாக்கத்தை எதிர்கொள்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாட, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்குக் கவலையளிப்பதாக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

மோசமடைந்துவரும் இந்த நிலைமையைப் பொதுமக்களும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதமும் பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மசகு எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருக்கும் இலங்கைக்குக் கூடுதல் சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், "எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடச் சந்திப்பைக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதும் அவசியமாகியுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

தற்போதைய உலக சந்தை விலைகளின் பின்னணியில், தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சிரமங்கள் இருப்பதாக, நாட்டில் செயற்படும் ஏனைய சில்லறை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் மற்றும் யுக்ரைன் தொடர்பான மோதல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் மசகு எண்ணெய் விலைகள் இந்த வாரம் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயர்வை எட்டியுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சில சந்தைகளில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 'எல் நினோ' வானிலை தாக்கத்தால் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளதால், மின் உற்பத்திக்காக அதிகளவு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

"போதுமான நீர்மின் உற்பத்தி இல்லாத காரணத்தால், மின்சார உற்பத்திக்காக இருப்பிலிருந்து அதிகளவு எரிபொருளை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது எங்களுக்கு மேலும் ஒரு கடுமையான சவாலாக மாறியுள்ளது," என்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments