
ஈரானுடனான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவர கட்டார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகள் திங்கட்கிழமை (28) மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இப்போரில் அமெரிக்கா "மிக விரைவில்" வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
ஒவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே ட்ரம்ப் இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
"நாங்கள் வெற்றி பெறப்போகிறோம். என்னைப் பொறுத்தவரை, இது ஒரு வழியில் அல்லது வேறு வழியில் சாத்தியமாகும். இப்போரின் முடிவு மிகவும் விரைவாக எட்டப்படும்" என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா இப்போரில் வெற்றி பெற்றவுடன், தற்போதைய பதற்றத்தால் உயர்ந்துள்ள எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலைகள் அதிரடியாகக் கீழ்நோக்கிச் சரிந்து இயல்புநிலைக்குத் திரும்பும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கட்டார் மற்றும் பாகிஸ்தான் தூதர்கள் மூலமாக ஈரான் அனுப்பிய புதிய முன்மொழிவுகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் மத்தியஸ்தர்களுக்கும் இடையே திங்கட்கிழமை ஆலோசனைகள் நடைபெற்றதை ட்ரம்ப் உறுதிப்படுத்தினாலும், பேச்சுவார்த்தையின் உள் விபரங்களைப் பகிர மறுத்துவிட்டார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இராஜதந்திர தீர்வுகளுக்குத் தயார் எனக் கூறியபோதிலும், அமெரிக்கா தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது என்பதை ட்ரம்பின் இந்த அறிக்கை உணர்த்துகிறது.



0 Comments