
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' விரிவுபடுத்தப்பட்டுள்ளதையொட்டி, பெற்றோர்களுக்கு முதல்வர் ச. ஜோசப் விஜய் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அரசு பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்தத் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 19 லட்சத்து 34 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டத்தின் பெயர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என மாற்றப்பட்டது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். விரிவாக்கப்பட்ட திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இன்று இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், மாணவர்களின் பெற்றோர்களுக்கு மெசேஜ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "அன்பார்ந்த பெற்றோருக்கு, வணக்கம்! பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகைபுரிந்து, சிறப்பாகக் கல்வி கற்பதற்கு ஏதுவாகச் சத்தான, சுவையான காலை உணவு 22.9.2026 (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.



0 Comments