
இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரின் இடது கண்ணுக்கு மேலே இரண்டு பற்கள் வளர்ந்திருந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தகவல் நியூயார்க் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரையின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே முதலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. வலி எதுவும் இல்லாததால், அது சாதாரண கட்டியாக இருக்கலாம் என அவரது பெற்றோர் கருதியுள்ளனர்.
எனினும், சில நாட்களுக்குள் கண்ணிமைக்கும் புருவத்திற்கும் இடையிலான தோலில் இருந்து இரண்டு கடினமான, வெள்ளை நிறக் கட்டிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
அவை பற்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்டதால், சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். இதன்போது, வாய்க்குள் வளர வேண்டிய பற்கள் இடம்பெயர்ந்து கண்ணுக்கு மேலே வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பின்னர், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இரண்டு பற்களும் அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவம் உலகிலேயே முதன்முறையாகப் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக, வாய்க்கு வெளியே உடலின் வேறு பகுதியில் வளரும் பற்கள் ‘இடம்பெயர்ந்த பற்கள்’ (Ectopic Teeth) என அழைக்கப்படுகின்றன.



0 Comments