
பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குறித்த குழு நியமிக்கப்படும் எனவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து திருத்தங்களைச் சமர்ப்பிக்குமாறு அக்குழுவிற்குப் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், அதில் பிக்குமார்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகள் மகா சங்கத்தினருடன் கலந்துரையாடி அதற்கேற்ப மாற்றியமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அவ்வாறின்றி, சட்டங்கள் இருக்கின்ற போது, தனிப்பட்ட நபர்களுக்காக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தான் தயாராக இல்லை என்றும், சட்டம் தற்காலத்திற்குப் பொருத்தமானதாக இல்லையென்றால் உரிய வகையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதே உகந்தது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று (08) நண்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மகா சங்கத்தினருடன் நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.



0 Comments