மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் வெற்றிகரமாகத் தானம் செய்யப்பட்டுள்ளன.
தமது உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன், நோயாளியின் குடும்பத்தினர் இந்த உறுப்பு தானத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (2) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாகச் சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு புதிய வாழ்வளிக்கப்பட்டுள்ளது.
“உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும்” என வைத்தியசாலை பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்தார்.
இந்த மனிதநேயச் செயலுக்குச் சம்மதித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சத்திர சிகிச்சை மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.



0 Comments