
மியன்மாரின் மேற்கு மாநிலமான ரக்கைனில், உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த முகாம் மீது மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 வயதுக் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காயமடைந்துள்ளதாக நேரில் கண்ட சாட்சிகளும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மாநிலத் தலைநகர் சிட்வேக்கு வடகிழக்கே உள்ள பொன்னாக்யுன் நகரத்தின் பியார் லா இடம்பெயர்ந்தோர் முகாம் மீதே கடந்த வெள்ளிக்கிழமை (13) மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் மோதல்கள் இல்லாத பாதுகாப்பான பகுதி என நம்பி கடந்த நான்கு ஆண்டுகளாகப் பலர் இங்கு தங்கியிருந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி போர் விமானம் மூலம் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
தாக்குதலில் மூங்கில் வீடுகள் தரைமட்டமானதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், சகோதரர்கள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 10 வயதுச் சிறுவன் உள்ளிட்ட பல உறவினர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் அவசர அவசரமாக தற்காலிகப் புதைகுழிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து தீவிரமடைந்த உள்நாட்டுப் போரினால் ரக்கைன் மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பகுதி சிறுபான்மை ஆயுதக் குழுவான 'அரக்கன் இராணுவத்தின்' கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மியன்மார் இராணுவம் அப்பகுதி மீது முற்றுகையிட்டுத் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மியன்மாரில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதிலிருந்து அனைத்துத் தரப்பிலும் இதுவரை 100,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச கண்காணிப்பு அமைப்பான ACLED மதிப்பிட்டுள்ளது.



0 Comments