Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இட நெருக்கடி காரணமாக: 30 கப்பல்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன...!



துறைமுகத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாக கடந்த இரு வாரங்களில் துறைமுகத்துக்கு வந்த 30 வரையான கப்பல்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

துறைமுகத்துக்குள் நிலவும் இடப்பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கலன் விடுவிப்பில் நிலவும் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகள் வழங்கும் சங்கங்களுடன் கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இவர்கள் சகலரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவை உபகுழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைய, கொழும்புத் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (13) 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 242 கொள்கலன்கள் தொடர்பான பரிசோதனைகள் நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலீ அருக்கொட தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுங்கத்தினால் 500 கொள்கலன்கள் பரிசோதிக்கப்பட்டு விடுவிக்க கூடியதாக இருந்தாலும் விடுவிப்பு அதிகாரிகள் மற்றும் லொறி சாரதிகளின் வருகை குறைவடைந்துள்ளதால் விடுவிக்கப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை இவ்வாறு குறைந்த மட்டத்தில் பேணப்படுவதாகவும் பொருள் பரிசோதனை பிரிவில் இன்னும் 496 கொள்கலன்கள் மீதமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் கொள்கலகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொள்கலன் வருகையானது பொதுவாக 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவே துறைமுக அதிகாரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, துறைமுகத்துக்குள் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் இந்த மாதத்துக்குள் கொள்கலன் வாகனங்களை நிறுத்துவதற்கு வேறு இடங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படும் கொள்கலன் வாகனங்களை நிறுத்த பேலியகொடவில் தனியான இடமொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்துக்கு சொந்தமான மேலும் இரு காணிகள் புளுமெண்டல் பிரதேசத்தில் இருக்கின்றன. அவற்றையும் இதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான முழு திட்டம் உரிய காலத்தில் முன்னெடுக்கப்படாமையின் காரணமாகவே துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை மீள திருப்பி அனுப்பி வைக்க நேர்ந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை பொறுத்தவரை உரிய நேர்த்தில் உரிய நடவடிக்கை எடுக்காமையே தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், “கடந்த இருவாரங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு வந்த 30 வரையான கப்பல்கள் மீளத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துறைமுக அபிவிருத்தி பணிகள் முறையாக இடம்பெற்றிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments