இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகிறது.
இப் போட்டி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிறது.
இலங்கையும் பாகிஸ்தானும் இருதரப்பு மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் விளையாடுகின்றன. அதேவேளை பாகிஸ்தான் மகளிர் அணி எட்டு வருடங்களுக்கு பின்னர் இருதரப்பு தொடரில் விளையாட இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.
இரண்டு அணிகளும் கடைசியாக 2018இல் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 3 - 0 என முழுமையாக கைப்பற்றி இருந்தது.
நான்கு வருடங்களுக்கு முன்னர் கராச்சியில் நடைபெற்ற தொடரிலும் பாகிஸ்தான் 2 - 1 என வெற்றிபெற்றிருந்தது.
1998இலும் 2022இலும் இங்கு நடைபெற்ற இரண்டு தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் ஒருநாள் போட்டிகளில் 34 முறை சந்தித்துள்ளன, அவற்றில் இலங்கை 22 போட்டிகளிலும், பாகிஸ்தான் 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றன.
இந்தத் தொடர் 2029 மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் சுற்றாகவும் அமைகின்றது.
உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனவே, இந்தத் தொடரானது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னேறுவதற்கான ஒரு போராட்டமாகவும் அமையவுள்ளது.
இந்தத் தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் 19 வயதான ரஷ்மிகா செவ்வந்தி அறிமுக வீராங்கனையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவர் கடந்த வருடம் மார்ச் மாதம் நியூஸிலாந்தில் நடைபெற்ற மகளிர் சர்வதேச ரி20 போட்டியில் அறிமுகமாகி இதுவரை 6 உலக ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை குழாத்தில் நேற்றைய தினம் அவசரமாக மாற்றம் ஒன்று செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்தது.
குழாத்தில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த காவியா காவிந்திக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மல்கி மதாரா குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
0 Comments