Trending

6/recent/ticker-posts

Live Radio

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று...!



கொழும்பு புதுக்கடை மேல்நீதிமன்றின் மூவரடங்கிய விசேட நீதிபதி குழாம் முன்னிலையில் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

மேல்நீதிமன்றத்தின் நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கவுள்ளது. நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கில் 2309 முறைப்பாட்டாளர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

7 வருடங்களுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கு விசாரணைகளில் அடையாளம் காணப்பட்ட 3000க்கும் அதிகமான சாட்சியங்களில் 547 சாட்சியங்கள் ஆராயப்பட்டதுடன், 2 ஆயிரத்து 77 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் டிஎன்ஏ அறிக்கைகள் அரச பகுப்பாய்வு அறிக்கைகள், நீதித்துறை மருத்துவ அதிகாரி அறிக்கைகள் என்பன உள்ளடங்குகின்றன.

வழக்கின் அரச தரப்பு சாட்சியங்களை விசாரிக்கும் செயற்பாடு கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 2026 ஆகஸ்ட் மாதம் 24ம் திகதியே குறித்த விசாரணைகள் நிறைவுக்கு வந்தன. இதற்கமைய, இந்த விசாரணைகள் இரண்டரை வருடங்களையும் சுமார் 250 விசாரணை நாட்களையும் உள்ளடங்கியுள்ளன.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 274 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 577 பேர் தாக்குதல்களில் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 40 பேர் வெளிநாட்டவர்கள். இதேவேளை வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments