
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் ஒரு சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி, காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமையை (Paperless Customs Declaration Process) அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு இன்று (01) பொருளாதார மேம்பாட்டுத்துறை பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர அவர்களின் தலைமையில் சுங்கத் திணைக்களத்தில் நடைபெற உள்ளது.
இதற்கமைய, அனைத்து இறக்குமதியாளர்களும் மற்றும் பிரகடனதாரர்களும் தங்களது சுங்கப் பிரகடனங்களையும் (CusDecs) மற்றும் ஏனைய தொடர்புடைய கோப்புகளையும் முறையான டிஜிட்டல் கையொப்பத்துடன் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பழைய முறையில் சமர்ப்பிக்கப்படும் சுங்கப் பிரகடனங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொதுச்சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமான அரச சேவைகளை டிஜிட்டல்மயமாக்கும் முறைமையின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை மூலம், சுங்க அனுமதிச் செயல்முறையின் கீழ் மிகவும் பயனுள்ள, வேகமான மற்றும் வெளிப்படையான சேவையை வழங்க முடியும்.
டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பின்னர் செய்யப்படும் மாற்றங்களை இம்முறைமை அடையாளம் காணும் என்பதால், முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறைவதும் இதன் சிறப்பம்சமாகும்.
இலங்கை சுங்கம் 2025 ஆம் ஆண்டில் தனது வருமான இலக்கைத் தாண்டி 2,231 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டத் தகுதிபெற்றதுடன், நடப்பாண்டில் கடந்த 08 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனது எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி வருமானம் ஈட்டத் தகுதிபெற்றுள்ளது.
புதிய டிஜிட்டல் முறைமையுடன் சுங்க நடவடிக்கைகள் மேலும் திறம்பட செயல்படுவதன் மூலம் சுங்க வருமானம் மேலும் அதிகரிக்கும்.



0 Comments